வேலாயுதத்தின் 7-ஆம் அறிவு

ACVelayutham

விசயின் விசிறிக்கூட்டம் வேலாயுதம் போஸ்டர் கண்டு வீறிட்டுக்கொண்டிருந்த நேரம், சூர்யாவின் சுற்றுவட்டாரங்கள் சூப்பர் கதையென்று சூளுரைத்துக்கொண்டிருந்த நேரம், நண்பனிடம் இத்திரைப்படங்கள் இரண்டையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சட்டென்று சொன்னான்: “மச்சி, ஒரே வீடியோ கேம்ல இருந்து காப்பி அடிச்சு எப்பிடிடா ஒரே நேரத்துல ரெண்டு படம் ரிலீஸ் பண்றாங்க?”. என்னதான் வீடியோ கேம்களில் ஆர்வமிருந்தாலும், நீட் ஃபார் ஸ்பீட், மார்ட்டல் காம்பாட் என இரண்டொன்றைத்தவிர வேறெதும் விளையாடியிராததினால் ’ஙே’ என்று விழித்தேன். அப்போது அவன் அறிமுகப்படுத்திய பெயர்தான் Assassin’s Creed (’கொலையாளியின் கோட்பாடு’ என்றெல்லாம் கொலைவெறி காட்டாமல் ஆங்கிலத்திலேயே எழுதிவிடுகிறேன்).

Continue reading

பெயரில்லாத சிறுகதை – மீள்பதிவு

இச்சிறுகதையை எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. இன்று படித்துப் பார்க்கும்பொழுது பல இடங்களில் காமெடியாக இருக்கிறது (எழுத்தல்ல, எழுதப்பட்ட விதம்). அப்போது இதைப் படித்துப் பார்த்த என் நண்பனின் அறைத்தோழன் அவனிடம் சொன்னது: “யார்றா எழுதுனது? சுஜாதாவுக்குப் பக்கத்து வீட்டுப் பையனா!”. வாத்தியாரைப் படித்து வளர்ந்ததில் வாத்தியார் நடையில்தானே எழுத வருகிறது! என்ன செய்ய? இனி கதை.
Continue reading

இத்தாலியில் பத்து நாட்கள் – 1

romeruins

வருடத்துக்கு மூன்று வாரங்கள் விடுமுறையென்று பெரியமனது பண்ணியிருக்கிறார்கள் முதலாளிகள். ஒவ்வொரு வருடமும் அதில் இரு வாரங்களாவது பிறந்த மண்ணுக்கு அர்ப்பணமாகிவிடுவதால் மிச்சமிருக்கும் ஒரு வாரத்தை வைத்து உலகப்பிரயாணமெல்லாம் மேற்கொண்டாகவேண்டியிருக்கிறது. சனி, ஞாயிறெல்லாம் பீறாய்ந்தால் பத்து நாட்கள். ஆசியா சொந்தம், அமெரிக்கா பந்தம் என்றாயிற்று. விட்டால் உலகப்பயணத்தின் அடுத்த இலக்கு, ஐரோப்பா!

ஐரோப்பா. பத்து நாட்கள். என்ன செய்வீர்கள்? “மச்சி! நேரா ஆம்ஸ்டர்டாம் போயிரு. இதெல்லாம் ஒரு கேள்வியா!” என்று அறிவுரை பகரக்கூடிய நண்பர்கள் தகையப்பெற்றவனே அடியேன். இருந்தாலும், இது எனது முதல் ஐரோப்பியப் பயணம் (அமெரிக்கா போகிற வழியில் டூட்டி ஃப்ரீ கடைகளை மேய்ந்து ஃப்ளைட் மாறுவதெல்லாம் இதில் சேர்த்தியில்லை). அவ்வகையில் ஆம்ஸ்டர்டாம் போய் ’போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்ள’ ஆர்வமுமில்லை; கூடவே வரப்போகிற சகதர்மிணியிடம் சாத்து வாங்க சக்தியுமில்லை. பாரிஸ் போயிருக்கலாம் – ஐஃபல் டவர், நாட்ர்டாம், லூவ்ர, நவநாகரிகத் தலைநகரம்…கிடக்கட்டும். லண்டன், சுவிட்சர்லாந்து என்று பல சாத்தியங்களிருந்தாலும் நாங்கள் தெளிவாகவே இருந்தோம்: ஐரோப்பாவில் முதல் காலடி இத்தாலியில்தான்.
Continue reading

ஐபேடும் சில ஐயோபேடுகளும்

notion_ink_adam_side

சென்னையில் புத்தகக் கண்காட்சித் திருவிழா குறித்து ட்வீட்டித் தள்ளும் பாக்கியவான்கள் தலையிலெல்லாம் இடி விழட்டும் என்று எங்காவது எழுத உத்தேசித்திருந்தேன். இந்த இடம் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர்களெல்லாம் தமிழ் நுங்கி தடித்துப் போய்க்கொண்டிருக்க, நமக்கு வாய்த்ததெல்லாம் நாலு சுவரும் நாசமாய்ப் போன ஃபேஸ்புக்கும் தான். ஆயினும், அதிலும் ஒரு சுவாரசியமிருக்கிறது. காரணம் அதில் கடந்த நான்கு நாட்களாக அல்லோலகல்லோலப்படும் எலெக்ட்ரானிக் செய்திகள்.

எலெக்ட்ரானிக் திருவிழா

வருடத்தின் முன்னூற்று அறுபது நாட்களில் லாஸ் வேகஸ் என்றால் பளபளா மாளிகைகளும், பர்ஸ் கிழிக்கும் ஜூதாட்டமும், பறக்கவைக்கும் குவார்ட்டரும், பலான பலான மேட்டரும் என்றிருந்தாலும் இந்த ஜனவரி மாதம் ஐந்து நாட்கள் மட்டும் அந்நகரம் வேறொரு வேடம் பூண்டு ஒரு மாபெரும் எலெக்ட்ரானிக் திருவிழாவுக்காக நாடெங்கிலுமிருந்து வந்து குவியும் எலெக்ட்ரானிக் ஆர்வக்கோளாறுகளை வரவேற்கிறது. Consumer Electronics Show(CES) எனப்படும் இக்கண்காட்சி டிஜிட்டல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கடைவிரித்து இந்த வருடத்து புதுச்சரக்குகளையெல்லாம் கொலு வைக்கும் ஒரு சைபர் சந்தை. ஒரே ஒரு பிரச்னை: நானோ நீங்களோ சும்மா நுழைவுச்சீட்டு வாங்கி உள்நுழைய முடியாது. மின்னணுத் துறைசார்ந்து பணிபுரிந்தால் மட்டுமே அனுமதி உண்டு. அதனால் நம்போன்றவர்கள் இதுபற்றி இணையத்தில்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
Continue reading

தமிழுக்கான ஒரு கேள்வி-பதில் வலைதளம்

நேற்று என் ட்விட்டரிலும் மூஞ்சிபுஸ்தகத்திலும் பார்த்திருப்பீர்கள்: தமிழ் குறித்த கேள்வி பதில் வலைதளம், ஸ்டேக் எக்ஸ்சேஞ்சில். அது என்ன ஸ்டேக் எக்ஸ்சேஞ்ச் (www.stackexchange.com)? அதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு விளக்க போஸ்டு போடுவது உத்தமம் என்று தோன்றியது. அதுதான் இது.
Continue reading

பரிசோதனைப் பதிவு

பரிசோதனைப் பதிவு. செல்லினத்தின் உதவியுடன் வெர்ட்பிரஸ் ஐஃபோன் மென்பொருளில் உள்ளிட்டு எழுதிப்பார்க்கிறேன். சுலபமாக இருந்தால் அவ்வப்போது நெடும்பயணத்தினிடையே வலைப்பதிவு எழுத இயலுமோ என்னவோ.

மேல்kind – சகாப்தம் சமாப்தம்

முன்னொரு காலத்தில் சைதையாற்றங்கரையில் முச்சங்கர் என்றொரு கும்பல் இருந்தது. பொழுது போகாததோர் சுபயோக சுபதினத்தில் அவர்கள் ஒன்றுகூடி, பள்ளிப்படையருகே லொள்ளுக்கூட்டமொன்று போட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட…சே! பழக்க தோஷம்…அனைத்திந்திய பேச்சிலர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி, மேல்kind என்ற உலகமுக்கியத்துவம் வாய்ந்த வலைப்பதிவினைத் தொடங்கினர். தமிழ் வலைப்பதிவுலகம் மிரண்டுபோய்த் திரும்பிப் பார்த்தது. Continue reading

ஆட்டோபாம்

மயிலாப்பூர் கச்சேரி ரோடு பிரியாணிக் கடைகளுக்கு அருகே:
கோயிஞ்சாமி: ஆட்டோ வருமா, ராக்கியப்பன் தெரு போகணும்
ஆட்டோ: நாப்பது ரூபா சார்
கோயிஞ்சாமி: (தலை சுற்றி சுதாரித்து) இருவது ரூபா தான ஆவும்?
ஆட்டோ: என்ன சார் பண்றது. லஸ் சர்ச் ரோட ஒன்வே ஆக்கிட்டாங்க. சுத்திட்டு தான் போகணும்
கோயிஞ்சாமி: ???!!! (தெருவில் மயங்கி விழாத குறை) நான் நடந்தே போயிடறேங்க…
Continue reading

கோவிந்தனைக் காணச் சென்ற கோவிந்தசாமி

tirupati

பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் திருப்பதி. அண்ணன், அண்ணியுடன் ஒரு நாள் விசிட். ஒன்பதாம் வகுப்பில் சேருமுன்னர் திருப்பதியில் மொட்டையடித்து நெடும்பாம்புக்கியூவில் நின்ற அனுபவம் இலேசாக நினைவிலிருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் ட்ரிப் நன்றாகவே இருக்கிறது. வோல்வோ பேருந்து, காலை டிபன், மதிய சாப்பாட்டிலிருந்து தரிசனம், பிரசாதம் வரை அனைத்தும் அரேஞ்ச் செய்துவிடுகிறார்கள். கூடவே ஒரு திருட்டுமுழி, உடைந்த ஆங்கில கெய்டு. மேல் திருப்பதியில் காட்டேஜ் என்று ஒன்றைக்காட்டி அங்கே ஒரே ஒரு டாய்லட்டைத் திறந்துவைத்து அடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு செல்ஃபோன்களைப் பிடுங்கிக்கொண்டு செருப்புகளை அங்கேயே கழற்றச் சொல்லி மே மாதத் தணல் வெயிலில் நான்கு தெரு நடக்கச் சொல்கிறார்கள். வேங்கடவனின் தரிசன ஆர்வம் பலரை உந்தித்தள்ளுகிறது (சிலரை, கொதிக்கும் கால்). கெய்டு டூரில் வந்த மக்களெல்லாரும் இருக்கிறார்களா என்று எண்ணி எண்ணி மாய்கிறார். தானே உள்ளே வந்து கியூவில் எல்லாரையும் நிறுத்துவேன் என்று அடம்பிடிக்கிறார். தரிசன டிக்கெட் வாங்கி முன்னமே கையில் கொடுத்து, இத்தனை மணிக்குத் திரும்ப வேண்டும் மானிடப் பதர்களே என்று சொல்லிவிட்டால் சுலபமாக இருக்குமென்று தோன்றியது.

திருப்பதி பக்தர்களின் பக்தி ஃபார்மட் பிடிபடமாட்டேன் என்கிறது. சக மனிதர்களின் முகரையை இடித்துப் பெயர்த்து, மிதித்துத் துவைத்து, கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மீது விசேஷ கவனம் செலுத்தி ஏறி மிதித்து, கையில் அகப்பட்ட தலைமயிரை எல்லாம் பிடித்திழுத்துச் சண்டமாருதம் செய்துகொண்டே ஏடுகொண்டலவாடா, வேங்கடரமணா என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். திருமலையுறை திருமாலைக் காணும் அவாவினால் உந்தப்பட்டு நிதானம் இழக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை. அருகே நின்றிருந்த அன்பர்களின் தெலுங்கு சம்பாஷணையின் தமிழாக்கம்: “மாப்பு, அப்பிடியே கைய சைடுல வெச்சினு இடிச்சினே வா. வழி கரெட்டா கெடச்சிரும். பொம்பள, ஆம்பளன்னு பாக்காத”. பின்னால் நின்றிருந்த (என் முதுகை மிதித்துக் கொண்டிருந்த மகானுபாவன் என்றும் சொல்லலாம்) அன்பர் தன் மனைவியிடம் சொன்னது: “அந்தப் பையைத் தூக்கி முன்னால இருக்குறவன் தலை மேல வை. எவன் கண்டுக்கப்போறான்”. பேருந்தில் ஏறும்போது, கியூவில் முந்தும்போது எப்போதும் வந்துநிற்கும் அந்தக் காட்டுத்தனம் இறைவனை தரிசிக்கும்போதும் இயல்பாக வருகிறது. பக்தி, சிரத்தை எல்லாம் incidental போலிருக்கிறது.

எப்போதும் போல் மனத்தைக் கொள்ளை கொண்டவை வேங்கடவன் தரிசனம், திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே பேருந்து செலுத்தும் ஓட்டுனர்களின் லாவகம், பிரசாத லட்டு மணம் (சைஸ் தேய்ந்துகொண்டே போவது போன்ற பிரமை :( ). பொதுவாக infrastructure நன்கு முன்னேறி இருக்கிறது. அங்கங்கே படிகளுக்கு பதில் ramp வைத்திருப்பது கொஞ்சம் பயமாக இருக்கிறது. சதாசர்வகாலமும் தண்ணீரில் ஊறி சறுக்கித் தள்ளுகிறது. நிறைய செக்யுரிட்டி செக்பாயிண்டுகள், எங்கு பார்த்தாலும் டைல்ஸ் பளபளா என்று கார்ப்பரேட் களை பின்னுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் இலவச பொங்கல், புளியோதரை பிளாஸ்டிக் குவளைகளில், துடைத்துக்கொள்ள நாப்கினுடன் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

இன்று நேத்திர தரிசனமாம். அதாவது எம்பெருமான் கண்திறந்து நம்மைப் பார்க்கும் நாள். அடிதடி அதிரடிகளுக்கு மத்தியில், கண்திறந்த கோவிந்தனுடன் கொஞ்சமாகவேனும் உரையாட வேண்டியிருந்தது. சில கேள்விகளும் பிரார்த்தனைகளும். அனைத்தையும் கேட்டுப் புன்முறுவல் செய்தபடி அமைதியாக இருந்தான் நாராயணன் என்றுதானே இப்பதிவை முடிக்கவேண்டும்?

செம்மொழியான தமிழ் மொழியாம் – ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது

‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ கேட்டேன். மூஞ்சிபுஸ்தகத்தில் மூலைக்கு மூலை லிங்க் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்று தான் கேட்கத் தகைத்தது. நவீனத் தமிழ் அத்தாரிட்டியாகத் தன்னை ஆணித்தரமாக நிலைநிறுத்திக்கொள்ள கலைஞருக்கு இன்னொரு இடம் கிடைத்திருப்பதால் இது மாநாட்டிற்கான பாடல் மட்டுமல்லாது தமிழர்களின் ‘anthem’ ஆகவும் இருக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். ஆண்டாண்டுகளாக நாம் பாடிவந்த கவித்துவம் (செய்யுள்-த்துவம்?) செறிந்த தமிழ்த்தாய் வாழ்த்து தறிகெட்டுப் போகட்டும். திருவனந்தபுரத்து சுந்தரம் பிள்ளை தானே…கிடக்கட்டும் கிடப்பிலே!

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அலையும் பாடல் வரிகள். தம்பிகளுக்குக் கடிதம் எழுதிச் சோர்ந்திருக்கும் வேளைகளிலெல்லாம் ஒவ்வொரு வரி எழுதி இருப்பார் போலும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… பிறந்த பின்னர்’ – இது ஒப்பனிங் வரி. தமிழ் இரண்டாம் தாளில் பொதுக்கட்டுரை எழுதுவது போல. எ.கொ.ச! ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தமிழ் வார்த்தை கேட்டுப் புல்லரித்துக் கிடக்கும் சமஸ்கிருதமும் பிரஞ்சும் படித்த நம் தமிழார்வக்கோளாறுகள் பாதி புரிந்தும் புரியாமலும் தலையில் தூக்கி வைத்து ஆடத்தக்க வரிகள் அமைத்திருக்கும் சாமர்த்தியம் சிறப்பு. நல்ல பேசிக் கவரேஜ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: வள்ளுவன், பூங்குன்றன், கம்பன், அவ்வை, தொல்காப்பியம், ஐம்பெருங்காப்பியங்கள் போட்டாயிற்று. நடுநடுவே சொந்தச்சரக்கு. பொருளைப் பொதுவாக்குவது வேறு. பொழுது போகவில்லை என்றால் எதையாவது பொதுவாக்குவதே வேலை. புதிய தலைமுறைக்கேற்ற தமிழ் வாழ்த்துப் பாடலாம். கொண்டுவாரும் அய்யா எமது மீசைக் கவியின் புத்தகத்தை. புதிய தலைமுறைக்கான வரிகளை அதில் காட்டுகிறேன். இரண்டரை மாதம் இதை வைத்து முட்டிக்கொண்டதற்குப் பதில் ரஹ்மான் நாலு பாரதி பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கலாம்.

ரஹ்மான் அவரது ‘தேசபத்தி புல்லரிப்பு’ டெம்ப்ளேட்டைக் கையில் எடுத்திருப்பதால் (கேட்க: தாய் மண்ணே வணக்கம், வெள்ளைப் பூக்கள், புத்தம்புது பூமி இன்னபிற) பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. எந்த பரிசோதனை முயற்சியிலும் இறங்காமல் பேசிக் டெம்ப்ளேட் பயன்படுத்தி இருப்பதால் மினிமம் காரண்டி உண்டு. ஒவ்வொரு வரி பாட ஒவ்வொரு பெரிய தலை. முக்கியமாக மிஸ்ஸிங் எஸ். பி. பி, சித்ரா போன்றவர்கள். ஒரு வரியெல்லாம் பாட முடியாது போவென்று சொல்லியிருப்பார்களோ? கவுதம் மேனனின் வீடியோ அவரது படங்களைப் போலவே. ஒரு சில இடங்களில் சிறப்பு. வேறு சில இடங்களில் சொறி கடுப்பு.

இனி பாடல். ரஹ்மானின் விசிறி நான். அதற்காக அவர் செய்யும் அனைத்தும் அற்புதம் என்றெல்லாம் உதார் விடுகிற ஆள் கிடையாது. இந்தப் பாடலில் சில இடங்களில் சோபித்திருக்கிறார். பல இடங்களில் சொதப்பி இருக்கிறார். பாடல் மறுமுறை கேட்கும்படி இருக்கிறது. இந்த வரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது ரஹ்மானின் கைவண்ணத்தால் மட்டுமே. அதைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் இப்படி ஒரு விஷயம் செய்யும்போது சில பொறுப்புகள் இருக்கின்றன. மிக முக்கியமான ஒன்று: தமிழைப் பற்றிய ஒரு பெரிய விழாவில், (அந்த விழா தேவையா என்பது பற்றிய விவாதத்தில் நுழையவில்லை இங்கே) தமிழைப் பற்றிய ஒரு பாடல் செய்யும்போது குறைந்தபட்ச பொறுப்பு, தமிழைச் சரியாக உச்சரிப்பது. இந்தப் பாடலில் அதை செய்யத்தவறியவர்களை உதைக்கலாம். என்ன செய்வது? கும்பலின் தலையே அந்தத் தவறைச் செய்கிறதே? யாதும் ஊரே யாவரும் கேளீஈஈர் என்று ரஹ்மான் பாடும்போது கோபம் வருகிறது. சினிமாப்பாடல்களில் வைரமுத்துவின், வாலியின் வ(சொ)ரிகளுக்குப் பாடும்போது இம்மாதிரி தவறு செய்தால் கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடலாம். இங்கேயுமா? குறள் என்று சொல்லத் தெரியாத விஜய் யேசுதாஸ் இந்தப் பாடலில் பாடத் தேவை இல்லை என்றே கருதுகிறேன். அதேபோல ஸ்ருதி ஹாசன். இவரது அப்பாவைக் கேட்கச் சொல்லவேண்டும் இவர் பாடிய லட்சணத்தை. பிறகு அந்த ராப். சரியான தமிழ் உச்சரிப்புடன் ராப் செய்யமுடியும். செய்திருக்கிறார்கள் (நட்சத்திராவின் டாக்டர் பர்ன் ழ, ள தவிர மிச்ச எல்லாவற்றையும் ஸ்பஷ்டமாக உச்சரித்தே ராப் பாடுகிறார்). தமிழ் பற்றிய பாடலில் ‘கவியரசி அவ்வை நல்லாள்’ என்று உச்சரிக்கத் தெரியாத பெண்மணிகள் கண்டிப்பாகத் தேவையே இல்லை. என் பாட்டி இம்மாதிரி கொடுமைகளைக் கேட்கும்போது சொல்லும் வரி நினைவுக்கு வருகிறது: அவள் வாயில் தர்ப்பையைப் போட்டுக் கொளுத்த.

ப்ளஸ்: இசை, வீடியோ சில இடங்களில்
மைனஸ்: மற்ற எல்லாமே