காதலர் தினக் கழுதை

ஒரு கணமே வீசிய தென்றலில்
அசைவுற்ற குறுமணியின்
ஒற்றையோசை
இலேசாகத் தொனித்த தருணத்தில்
என்முன்னே தோன்றத்தான் போகிறாய்

ஒரு நொடிப்பொழுதே பரவிய
சுகந்தத்தின் ஓரிழை
சுவாசித்த நிமிடத்தில்
நம் கண்கள் சந்திக்கத்தான் போகின்றன

ஒரு மீட்டலிலே அறுந்த

தந்தியின் அநாதம்
அதிர்ந்த பொழுதில்
உன் பார்வையை விலக்கத்தான் போகிறாய்

காதலர் தினத்தில் ஏதும் புதிதில்லை

சினேகமாக ஒரு பார்வை உதிர்த்துவிட்டுப் போ

மலர்களின் இதழ்களை

தேவதைகள் பிய்க்கமாட்டார்கள்

என்று கேள்வியுற்றிருக்கிறேன்.

அல்காரிதம்

நடுச்சாமக் கிறக்கத்தில்
நான்
என் அல்காரிதத்துடன்
புணர்ந்துகொண்டிருக்கும் தருணத்தில்
புத்தகக் குவியலின் வலக்கோடியில்
துருத்தித் தலைநீட்டிய
அக் கவிதைத் தொகுதி
கண்ணை உறுத்தும்.

கைகள்
அர்த்தமாய்ப் பரபரக்க…

அல்காரிதத்தைக் கிடப்பிலிட்டு
கவிதைப் புத்தகத்தை
வாஞ்சையாய்க் கையிலெடுப்பேன்.

பயமுறுத்தும் அட்டைப்படமும்
புரியமாட்டாதிருக்கும்
கவிதை சாத்தியமும்
தரும் கிளர்ப்பில்
சிலிர்த்துப்
புத்தகம் பிரிப்பேன்.

முகவுரை படித்து
முதற் கவிதை
தன் வனப்பை
என்முன் வைக்கும்.

சில நொடிக் கழிச்சலில்…

புத்தகப் பக்கங்கள்
பறந்து கொண்டிருக்க…

அல்காரிதப் பேய்
கண்முன் விரிய…

விஸ்வரூப தரிசனம்.

யதாஸ்தானமாய்
அக் கவிதைத் தொகுதி
புத்தகக் குவியலில்
துருத்தி தலைநீட்டும்
தன் இயல்பில் ஒன்றும்.

நானும் அல்காரிதமும்
மறுபடி புணர…

எதுவும்
இயல்பினின்றும்
பிறழ்வதே இல்லை.

புணர்வெறியில் அல்காரிதமும் நானும்.

புத்த்கச் சமாதியில்
நிதம் அடக்கம் செய்யப்படும்
அந்தக் கவிதைத் தொகுதியும்.

உரையாடல் – சில பரிமாணங்கள்

# அழைப்புகள்
பலவற்றினூடே
அவசரமாய்
உமிழப்படும்
உரையாடல்களைக் காட்டிலும்

பிறகு பேசுகிறேன்
என்ற உன்
ஒற்றை வரி
அர்த்தமாய்த் தொனிக்கிறது…

# உன்
பேச்சு சுவாரசியத்தில்
கவனிக்கத் தவறிவிட்டேன்…
என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்?

# அர்த்தமான
உரையாடலின்மைகளுக்காகக்
காத்திருக்கின்றது
கடற்கரையின்
அந்த
ஒற்றை மணற்துகள்…

சென்னைப்புற நானூறு

உம் புள்ள எங் க்குறான்னு
லெயிட்டு கம்பத்ல சாஞ்சினு
நெக்குலா கேக்குற!
எம் மவென் எங் க்குறான்னு எனுக்குத் தெர்யாது.
சொம்மா
புலி உள்ளாற இர்ந்து போனா மேரி
க்குது பெத்த வகுறு.
அய்த்யா குப்பத்ல
மூஞ்சி கீய்ஷ்ட்டு
E-5ல இர்ப்பாம்.
போயி பாரு!

சிசேரியன்

ஆண்டு மலருக்குக்
கவியெழுதச் சொல்லியிருந்தார்கள்.

இருள்.
இருட்டைக் காட்டிலும் கறுப்பாக
சுற்றிப்படர்ந்து மூச்சுத்திணற
ஒரு பொறி
ஒளிக்கூர் வாளாகக்
கருமையைக் கிழித்து
இத்யாதி
நெருப்புப் பதங்கள் பொறுக்கிக் கோர்த்து
புரட்சி உணர்ச்சி மறுமலர்ச்சி நிரப்பி
ரத்தமாக ஒரு கவிதை
கிளறி முடித்தேன்.

சென்ற மலரில் பொலிந்த
புரட்சிக் கவிதைக்கும்
இதற்கும்
வேற்றுமை அதிகம் காணப்படவில்லை.

ப்ரளயத் த்வனி.
சிவனார் ஆழிக்கூத்தாட
விஷ்ணு குப்புறப்படுத்திருக்க
ஒளிக்கோளங்கள் சிதற
உள் பிரவாகிக்கும்
உனக்கும் எனக்கும் எவனுக்கும்
புரியக்கூடாத
கவியன்றைச் செதுக்கினேன்.

பார்க்கவே பயமாக இருந்ததால்
கிழித்துப் போட்டுவிட்டேன்.

ஞாயிறு குடித்த
பீடிப்புகை கவிந்த
நீல வானம் பற்றி
இயற்கைக் கவிதை
செயற்கையாக ஜனித்தது
உடன் அடக்கம் செய்யப்பட்டது.

இலக்கண நெருக்கலில்
இலக்கே மரித்துப் போன
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும்
இசக்கவிகளும்
நீலக்கவிகளும்

பலவும்

முயன்று கைவிட்டபின்னும்

தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதைக்காக

வார்த்தைகளுக்கு மத்தியில்.

சத்தியமாய் ஜாலியாக எழுதியது.

சூனியம்.

அழுத்தம்.
ஓசை.
இருள்வெளியில் வெண்படிமங்கள் ஓடி மறையும்.
நீலம் வியாபிக்க நான் பிரசன்னமாவேன், இடப்புறம் தலைசாய்ந்த ஊசியாய் (வலப்புறம்?).
மத்தியில் நிற்பேன்.
மணலில் நேரங்கழிவதைக் காட்டிச் சுற்றுவேன்.
என்னை நீ அசைக்கமுடியாத சில கணங்களுக்குப் பிறகு உனக்கு நான் அடிமையாகி நிற்பேன்;
நீ எனக்கும்.

எதையேனும் தொடவேண்டும். நான்.
எதையேனும் இயக்கவேண்டும். நான்.
எதையேனும் இயற்றவேண்டும். நான்.
கருவூலம் திறக்கவேண்டும். நான்.
படர்ந்து அலையவேண்டும். நான்.

கீழே இடப்புறம் சூத்திரக்கயிறு.
என்னாலியக்கப்படும்.
சூட்சுமப் பாதைகள்.
என்னால் ஆராயப்படும்.
இடமாய் ஒரு தொழில்.
வலமாய் ஒரு தொழில்.
உன் இயக்கங்கள் அனைத்தினுக்கும் மவுன சாட்சியாய் விழித்திருப்பேன்.
என் மரணத்திற்கும் பாதையமைத்தளிப்பேன்.

நீ எஜமானன்.
நான் எஜமானன்.

அவன் வருவான்.
என் அசைவுக்காக நான் காத்துக்கிடப்பேன்.
பழைய வேதங்களைப் புதிய பாதைகளாய்ச் செப்பனிடுவான்.
நான் புறக்கணிக்கப்படுவேன்.

நான் தனித்திருப்பேன்;
என் இயலாமையோடு.

காத்திருப்பு

கையிலுள்ள
புத்தகத்தின்
கரிய மசி
அர்த்தம் நீக்கப்பட்டு
வெறிக்கப்படும்…

தொலைபேசியின்
சிணுங்கல்
இன்னும் என் காதுகளில்
விழாமலிருக்கும்…

இந்தத் தருணங்கள்
எனக்குப்
பிடித்திருக்கிறதா?
இல்லையா?