மியாவ் x 10^-34 ஜூல் நொடி

ஒரு வழியாகக் ‘குவாண்டம் இயற்பியல்’ பற்றிய தொடர் தொடங்குகிறது இன்றுமுதல். தொடங்குவதற்கு முன் ஒரு முன்னுரை (‘disclaimer’ என்று உங்கள் காதுகளுக்குச் சரியாக ஒலிக்கக்கடவது). கொஞ்சம் சொந்தக்கதை சோகக்கதைதான். ஆனாலும் சொல்லுவது அவசியமென்று கருதுகிறேன். எனக்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்?

நான் கணினிப்பொறியாளன் என்றாலும் முதலில் இயற்பியலில் இளநிலை பட்டதாரி. விவேகானந்தா கல்லூரியில் இரண்டாம் வருடம் இயற்பியல் படிக்கும்போது கோடை விடுமுறையில் இயற்பியலில் தொடர்வகுப்பொன்றுக்கு விண்ணப்பிக்க எண்ணியிருந்தேன். கொடுத்திருந்த பல்வேறு தலைப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் எங்கள் பேராசிரியர் திரு. முருகனிடம் போய்க் கருத்து கேட்டேன். “உனக்கு எது பிடித்திருக்கிறது?” என்று அவர் என்னைத் திருப்பிக்கேட்க, அந்த வயதில் எல்லோரும் சொல்வதைப் போல் நானும் வானவியல் என்று பதிலிறுத்தேன். அவர் சிரித்துக்கொண்டே “எத்தனை பேர்தான் இதையே சொல்லுவீர்கள்?” என்றார். உடனே நமக்குள் இருக்கும் வித்தியாசப் பிராணி விழித்துக்கொள்ள, பிற தலைப்புகளையும் மேய்ந்தேன். செயல்முறை இயற்பியல் (experimental physics) என்ற பெயர் பிடித்துப்போகவே அதைக் கைகாட்டினேன். அவருக்கு அதுவும் அவ்வளவு திருப்தியாகப் படவில்லை. “அடடா! இவரிடம் மாட்டிக்கொண்டோமே” என்று விழித்தேன். பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது தலைப்பில் கை வைத்துப் பார்ப்போமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் தத்துவ இயற்பியல் (theoritical physics) என்று பயமுறுத்தலாக இருந்த ஒன்றைக் காட்டி “இது எப்படி இருக்கு?” என்று கேட்க, “பயமா இருக்கு சார்” என்று சொன்னேன். பலமாகச் சிரித்துவிட்டு “நான் சில புத்தகங்கள் சொல்கிறேன். அவற்றைப் படித்துவிட்டு வந்து அப்புறம் பேசு” என்று சில பல்லுடைக்கும் பெயர்களைச் சொன்னார்.

நேராக பிரிட்டிஷ் நூலகம் ஓடு. அவர் சொன்ன புத்தகங்களில் ஒன்றே ஒன்றுதான் அகப்பட்டது. அதுவும் ஒரு மண்ணும் புரியவில்லை. சமன்பாடுகளால் ஜிலேபியிட்டிருந்தார்கள். அப்போது முதலாம் வருடம் படித்துக்கொண்டிருந்த தோஸ்து ஒருவன் இருந்தான். ஞானேசுவரன் என்று பெயர். கேள்வி கேட்டே சாகடிப்பான். அவன் சொன்னான் ஒரு புத்தகம் பற்றி. ஜான் க்ரிப்பின் எழுதிய “ஷ்ரொடிங்கரின் பூனையைத் தேடி…” என்ற புத்தகம். “விளையாடுகிறாயா” என்று கேட்டதற்குக் குவாண்டம் இயற்பியல் பற்றி வெகுமக்கள் அறிவியல் (popular science) புத்தகம் என்றான். கிடைக்கவே கிடைக்காது என்று சத்தியம் செய்தான். “Fritjof Capra படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

இந்த வார்த்தைகளையெல்லாம் முதன்முறை கேட்டதால் ஆன புல்லரிப்பு நீங்குவதற்கு முன்னால் பிரிட்டிஷ் நூலகம் ஓடு. இந்த முறை நூலகம் ஏமாற்றவில்லை. பூனையைப் பிடித்தவன் பாக்கியசாலி என்று அந்தப் புத்தகத்தையும் இன்னொரு புத்தகத்தையும் எடுத்துவந்தேன். முதலில் அந்த இன்னொரு புத்தகத்தைத் தான் எடுத்தேன். எனக்கு ஒரு புது உலகம் திறந்துகாட்டிய அந்தப் புத்தகத்தின் முதல் 30 பக்கங்களைத் தொடர்ந்து சமன்பாட்டுப்பிசாசுகள் வர ஆரம்பிக்க, அதை மூடி வைத்துவிட்டு நம் பூனையை ஒரு சுபயோக சுபநேரத்தில் எடுத்தேன். இன்றுவரை அந்த மலைப்பு நீங்காமலேதான் இருக்கிறேன்.

நான் மிகவும் ஊன்றிப்படித்த, பரிட்சைக்கு என்றில்லாமல் முழுவதும் புரிந்துகொள்ள முயற்சி செய்த, இன்றும் என்னைப் புல்லரிக்க வைக்கிற இந்த அற்புதத்தைப் பற்றி எழுதுவதற்கு ரொம்ப நாள் ஆசை. வலைப்பூக்களெல்லாம் என்னவென்று தெரியாத காலத்திலிருந்தே ஒரு இது. இப்போது நிறைவேறப்போகிறது.

இவ்வளவுதான் எனக்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் பரிச்சயம். எனக்கு சமன்பாடுகளெல்லாம் அவ்வளவாகப் புரியாது. அவற்றைப் பற்றிப் பேசுவதாக எண்ணமும் கிடையாது (காலப் போக்கில் புரிந்தால் நிச்சயம் எழுதுவேன்). இங்கு நீங்கள் பார்க்கப்போவதெல்லாம் எனக்குப்புரிந்த குவாண்டம் தத்துவங்கள். அவை காட்டும் புது உலகம். நாம் இயல்பாக ஒத்துக்கொள்ளும் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கலைத்துப் போடும் அதன் பயங்கரம்.

தொடக்கத்தில் கொஞ்சம் அடிப்படையான இயற்பியல் விஷயங்களை அறிமுகப்படுத்த வேண்டியதாகிறது. யார் படித்தாலும் புரியவேண்டும் என்ற விபரீத ஆசையின் விளைவு. புது முயற்சி என்பதால் அவ்வப்போது காணாமல் போய்விடுவேன். பொறுத்துக்கொள்ளுங்கள். RSS செய்தியோடை போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் நான் படித்த புத்தகங்களிலிருந்து சுட்டவை. புதுச் சரக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. என் புரிதலின் தளத்திலிருந்து சொல்வதே என் பங்கு. எனக்கு எவ்வளவு புரிந்திருக்கிறது என்று நோண்டிப்பார்க்கும் ஒரு முயற்சியாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியில் புதிதாக நாலு பேரை இந்தப் புதைகுழியில் இழுத்துப் போட்டால் என் முயற்சி முழுமையடைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

இந்த இயலில் தாத்தாக்களும் கொள்ளுத்தாத்தாக்களும் அமைதியாக இருக்க, பொடியன் நான் செய்யப்போகும் அதிகப்பிரசங்கித்தனத்தை வலைப்பதியும் நல்லுலகம் பெருந்தன்மையோடு மன்னித்தருளும் என்று முழு நம்பிக்கை இருக்கிறது எனக்கு.

கலைச்சொற்கள்தான் பிரச்னை எனக்கு. அவ்வளவாகத் தெரியாது. நான் பயன்படுத்தும் ஏதாவது சொல்லுக்கு நல்ல மாற்று இருந்தாலும் சொல்லுங்கள். வந்து ஜாலியாகப் படித்துவிட்டுப் போங்கள். ரொம்ப மண்டையைக் குழப்பினால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மிச்சமீதி உள்ள வலைத்தளத்தை மேயுங்கள். எனது தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பதிவுகள், புகைப்படங்கள், calvin and hobbes கார்ட்டூன் என்று கண்டதும் இருக்கிறது. குவாண்டம் உங்களை இழுக்காவிட்டாலும் கால்வினாவது இழுப்பானோ என்னமோ! :)

குறிப்பு: இதென்ன…எங்கேயோ ஏற்கனவே படித்தாற்போல இருக்கிறதே என்று யோசிக்கும் பழைய நண்பர்களுக்கு: ஆம் ஐயா/அம்மணி! அதே பழைய 2004 பூனைக்கதைதான். யாழ்.நெட் காணாமற்போனதால் இப்போது இக்கதை இணையத்தில் எங்கும் இல்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதில் அவர்கள் archives-லிருந்து பழைய பகுதிகளை எடுத்துத் தந்தனர். அவர்களுக்கு எனது கோடானுகோடி வந்தனங்கள்!

பாதியில் விட்டுப்போன அதைத் தொடர எண்ணம். ஆனால், இப்போது அதை எடுத்துப் பார்க்கும்போது அந்த நடை கொஞ்சம் நெருடுவதால், சற்றே மாற்றி எழுதி, முதலிலிருந்து தொடர நினைத்துள்ளேன்.