வேலாயுதத்தின் 7-ஆம் அறிவு

ACVelayutham

விசயின் விசிறிக்கூட்டம் வேலாயுதம் போஸ்டர் கண்டு வீறிட்டுக்கொண்டிருந்த நேரம், சூர்யாவின் சுற்றுவட்டாரங்கள் சூப்பர் கதையென்று சூளுரைத்துக்கொண்டிருந்த நேரம், நண்பனிடம் இத்திரைப்படங்கள் இரண்டையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சட்டென்று சொன்னான்: “மச்சி, ஒரே வீடியோ கேம்ல இருந்து காப்பி அடிச்சு எப்பிடிடா ஒரே நேரத்துல ரெண்டு படம் ரிலீஸ் பண்றாங்க?”. என்னதான் வீடியோ கேம்களில் ஆர்வமிருந்தாலும், நீட் ஃபார் ஸ்பீட், மார்ட்டல் காம்பாட் என இரண்டொன்றைத்தவிர வேறெதும் விளையாடியிராததினால் ’ஙே’ என்று விழித்தேன். அப்போது அவன் அறிமுகப்படுத்திய பெயர்தான் Assassin’s Creed (’கொலையாளியின் கோட்பாடு’ என்றெல்லாம் கொலைவெறி காட்டாமல் ஆங்கிலத்திலேயே எழுதிவிடுகிறேன்).


* * *

இந்த ஊர் தாங்க்ஸ்கிவிங்கில்தான் தாய்தந்தையரைத் தவிர இன்னபிற எல்லாமும் தாராளத் தள்ளுபடி விலையில் கிடைக்குமே! நள்ளிரவில் நாய் துரத்தும் வேளையில் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு நாலு கடை ஏறி இறங்கினால் போதும். அப்படி அலைந்தலைந்து ஒரு ப்ளே ஸ்டேஷன்-3யும் அதற்கென நான்கைந்து கேம்களும் உசார் செய்துகொண்டேன். குறிப்பாக இந்த Assassin’s Creed-ம். அப்போதுதான் தெரிந்தது அந்த game series-ல் மொத்தம் நான்கு கேம்கள் வந்திருக்கின்றனவென்று. முதலாவதும் நாலாவதும் ஒன்றாகப் பொட்டலம் கட்டி ஒண்றையணாவுக்கு விற்றதால் அதை வாங்கியாயிற்று.

ஹாலிவுட் திரைப்படங்களும் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர்களும் கெட்டன போவெனச் சொல்லுமளவுக்கு அப்படியொரு கதை. 2012-ல் தொடங்கும் இக்கதையின் நாயகன் டெஸ்மண்ட் மைல்ஸ் ஒரு பார்டெண்டர். அப்ஸ்டெர்கோ எனும் ஒரு மகாநிறுவனம் அவனைக் கடத்தி வருகிறது. டெஸ்மண்ட் கொலையாளிகளின் வம்சமொன்றில் பிறந்தவன் என்பது அவனுக்கே தெரியாது. டெஸ்மண்டின் மூதாதையரில் ஒருவன் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்டாயீர் எனும் கொலையாளி. அந்த அல்டாயீரின் நினைவுகளில் புதைந்து கிடக்கிறது ஒரு பரம ரகசியம். அதை எடுக்கத்தான் இந்தக் கடத்தல். அனிமஸ் என்றழைக்கப்படும் ஒரு தில்லாலங்கடி எந்திரத்தின் துணையோடு டெஸ்மண்டை அல்டாயீரின் நினைவுகளுக்குள் அனுப்பி அந்த ரகசியத்தை அறிந்துகொள்ள ஒரு வில்லவிஞ்ஞானி முயற்சிக்கிறான். இதனிடையே டெஸ்மண்டை இந்நிறுவனத்திடமிருந்து காப்பாற்ற இன்னுமொரு குழுவும் முயற்சிக்கிறது.

கதைக்களம்: இஸ்ரேல், பாலஸ்தீன், ஸிரியா பகுதிகள் உள்ளிட்ட புனித பூமி. ஜெருசலெம், டமாஸ்கஸ், ஆக்கர், மாஸ்யஃப் என நான்கு ஊர்களிலும் மாறி மாறிக் கதை நடக்கிறது.

பின்னணி: புனித பூமியைத் தனதாக்கிக்கொள்ள முதலாம் ரிச்சர்ட் மன்னனின் தலைமையில் கிறித்துவ க்ருஸேடர்களும், சலாஹதீனின் தலைமையில் இஸ்லாமியர்களும் அடித்துக்கொண்டிருந்த காலம். இவ்விரண்டு எதிரிகளோடும் கூடிக் கும்மியடித்துக்கொண்டிருக்கிறது டெம்ப்ளார் என்னுமொரு கூட்டம் (டாவின்ஸி கோட் நினைவிருக்கிறதா?). இஸ்லாமியர்களின் பக்கமிருக்கிறது அல்டாயீர் இருக்கும் கொலையாளிகளின் குழு. இக்குழுவின் நோக்கம் க்ருஸேடர்களை வென்றழிப்பது. போரிடுதல், உளவறிதல் போன்றவற்றில் புதிய உத்திகள் பலவற்றை இந்தக்குழு அக்காலகட்டத்தில் அறிமுகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கதை: கொலையாளிகளின் தலைவர், அல்டாயீரை ஏவிவிட்டு ஒன்பது கொலைகளைப் புரியவைக்கிறார். அதாவது அல்டாயீர் நினைவுகளை வாழ்ந்துகொண்டிருக்கும் டெஸ்மண்டை. டெம்ப்ளார்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது படிப்படியாகக் கதைவழியே அல்டாயீருக்கும், டெஸ்மண்டுக்கும், நமக்கும் புரிகிறது. ஒன்பது கொலைகளின் முடிவில் ஒரு திருப்பம் அமைகிறது. அது அல்டாயீரின் புரிதலைக் கவிழ்த்துப் போடுகிறது. இறுதியில் டெம்ப்ளார்களும், கொலையாளிகளும் 2012-ல் என்ன செய்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. அல்டாயீரின் நினைவில் ஒளிந்திருக்கும் ரகசியம் வெளிப்படுகிறது. அது அடுத்த வீடியோ கேமுக்கு ஒரு கொக்கியாக அமைந்து, கதை அந்தரத்தில் தொங்கியவாறே முடிகிறது.

இந்தக்கதையை விறுவிறு ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கலாம். ஒரு வீடியோ கேமாக எப்படிச் செய்வது? அதில்தான் இந்த மென்பொருளின் சிறப்பே அடங்கியிருக்கிறது. வெகு சாமர்த்தியமான கேம் திரைக்கதை, கட் சீன்கள், அமர்க்களமான கிராபிக்ஸ். ஒப்பன் வேர்ல்ட் கேம் என்றழைக்கப்படும் தொழில்நுட்பம் இதில் மிக முக்கியம். சாதாரண கேம்களில் சில குறிப்பிட்ட இடங்களுக்குத்தான் போகமுடியும், சில குறிப்பிட்ட செய்கைகளைத்தான் செய்ய இயலும். ஆனால் இந்தத் ’திறந்த உலகங்களில்’ எங்கு வேண்டுமானாலும் உலவலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் கட்டிடங்களின் மேலேறி நின்று வேவு பார்த்தல், தாவித்தாவிச் செல்லல், சந்துபொந்துகளில் ஓடுதல், ஊர்முழுக்கச் சுற்றிவருதல் என்று பலவும் சாத்தியம். இவையெல்லாம்தான் இந்தக் கதையை நகர்த்தப் பெரிதும் உதவுகின்றன. ஆட்டத்தின் ஓட்டத்தை விட்டுவிட்டுப் பலமுறை நான் ஊர் சுற்றிப் பார்ப்பதிலேயே காலத்தைக் கழித்திருக்கிறேன். ஜெருசலெம் நகரைச் சுற்றிப் பார்க்கக் கசக்கிறதா என்ன!

கொலைவெறி இந்த விளையாட்டின் முக்கியமான அம்சம். குறிப்பாகச் செய்யவேண்டியது 9-10 கொலைகள்தான் என்றாலும் அவற்றைச் செய்வதற்கு மொத்தத்தில் நூற்றுக்கணக்கில் சேவகர்களையும், படைவீரர்களையும், ஒற்றர்களையும் கொன்றுகுவிக்கவேண்டும்! எம்ஜியார்-வீரப்பா மாதிரி அமர்க்களமான கத்திச்சண்டைகள் கதை முழுக்க செய்யவேண்டும். பத்துப்பதினைந்து பேருடன் ஒரே நேரத்தில் வாட்போர் புரிவது, எதிரியை மடக்கி முதுகில் உதைப்பது, சட்டையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிடுவது, ஒரு சுற்று சுற்றி வாளை வீசி எதிரியைச் சிரச்சேதம் செய்வது, எதிரியின் வாள்வீச்சைத் தடுத்துத் திரும்பி அடிப்பது, கையில் ஒளிந்திருக்கும் சிறுகத்தியைக் கொண்டு எதிரியின் மென்னியைப்பிடித்து அடிவயிற்றிலோ முதுகிலோ குத்திச் சத்தமில்லாமல் காரியத்தை முடிப்பது என்று பல வித்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். (இந்த ஸ்டண்ட்களின் கிராபிக்ஸ் அதி அற்புதமாக இருக்கிறது!). இது மட்டுமில்லாமல் குதிரையேற்றம், எதிரி ஒற்றனை ஜேப்படி செய்து ஆவணங்களையும் வரைபடங்களையும் திருடுவது, ஒற்றனை அடித்து மிரட்டி உண்மையை வரவழைப்பது, ஒட்டுக்கேட்பது என்று சகலமும் கற்றுத்தருகிறார்கள். அவ்வப்போது வந்தியத்தேவன் போல உணர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

* * *

டெஸ்மண்ட் எனும் பார்டெண்டர் = சூர்யா எனும் சர்க்கஸ்காரன், அல்டாயீர் = போதிதர்மர், மூதாதையர் நினைவுகள், அனிமஸ் எந்திரம், இரண்டு குழுக்கள் நாயகனுக்காகப் போராடுவது என்று கதைக்கருவின் முக்கியமான அம்சங்களை எல்லாம் அப்படியே சுட்டுப்போட்டுவிட்டு ‘பண்ணேன் பார் ஆராச்சி’ என்று உதார் விட்டுக்கொண்டிருக்கும் முருகதாஸுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கஜினிக்கும் மெமெண்டொவுக்கும் சம்பந்தமே இல்லை என்று சத்தியம் செய்தவர்தானே நம் ஆள்! முருகதாஸின் பார்முலா இதுதான்: ”அட! வித்தியாசமா இருக்குல்ல?!” என்று சொல்லத்தக்க ஒரு சின்ன knot மட்டும் எங்கிருந்தாவது சுடவேண்டியது. பிறகு அதற்குக் கோடம்பாக்கம் பிராண்டு கோலிவுட் மசாலா தடவி சிக்கனமாக சிக்கனை முடித்துவிடவேண்டியது. இதில் “என் கதையை ஹாலிவுட் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்” என்று பெருந்தன்மை வேறு. ஊபிஸாஃப்ட் நிறுவனம் வந்து உண்டக்கட்டி கொடுத்தால்தான் இதெல்லாம் தெளியும்.

இது ஒரு இண்டலெக்சுவல்(?) காப்பி என்றால், வேலாயுதம் ஒரு இத்துப்போன காப்பி. சுட்டுப்போடுவதிலும் கற்பனைத்திறன் இல்லாமல் அல்டாயீரின் உடுப்பை அப்படியே எடுத்து விசய்க்கு மாட்டிவிடுவதெல்லாம் காமெடியின் உச்சக்கட்டம். விசய் செய்யும் சண்டைக்காட்சி ஸ்டண்ட் எல்லாம் அப்படியே அல்டாயீரின் வீடியோ கேம் ஸ்டண்ட் என்றுவேறு கேள்வியுறுகிறேன். இந்தக் கொடூரப்படங்களை எல்லாம் பார்ப்பதில்லை என்று வைத்திருப்பதால் இந்த ஒரு விஷயம் மட்டும் உறுதிசெய்ய இயலவில்லை.

என்றைக்கோ வந்த படங்களைப் பற்றி இப்போது என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நவம்பரிலேயே வாங்கியிருந்தாலும் வேலைப்பளு காரணமாக நேற்றிரவுதான் Assassin’s Creed 1 முழுமையாக விளையாடி முடிக்க முடிந்தது. அந்தக் கொலைவெறிதான்!

Leave a Comment.